Saturday, 4 June 2011

கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை?

ஈழத்துப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் அந்த சோகத்திலிருந்து மீளாத தருணத்தில் கருணாநிதியால் இந்த மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகத் தமிழாய்வு மன்றத்தின் ஒப்புதலில்லாமலே உலகத்தமிழ் மாநாடு என்ற அறிவிப்பு வெளியானது. அந்த நிறுவனத்தின் தலைவர் நெபுரு கராஷிமா ஒரு மானம் மரியாதை உள்ள ஒரு ஆள் போலிருக்கிறது அதனால் கருணாநிதியின் "தேவையை' அவரால் ஏற்க இயலவில்லை. நீண்டகாலமாக தி.மு.க.வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருக்கக்கூடும் என்பது அவருக்கு தோன்றவில்லை போலும்!
நெபுரு கராஷிமாவால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம் மாநாடு கருணாவின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இந்த புள்ளியிலிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன.
 
சட்டமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் உலகத்தமிழாய்வு மன்றம் செத்துவிட்டது என்று அறிவித்தார். ஈழத்து படுகொலைகளின் சோகம் அகலாத சூழலில் இந்த மாநாடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கனிமொழி சொன்னார் " மாநாட்டில் நமது ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதன் மூலம் நாம் ஈழத்தமிழருக்காக இன்னும் அழுத்தமாக குரல் கொடுக்கலாம்'. ஒன்று மட்டும் உறுதி, இன்றைய ஊடக ஆதரவுச் சூழலில் கருணாநிதி முகச்சவரம் செய்துகொள்வதுகூட ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் என்று கனிமொழியால் கூசாமல் சொல்லிவிட முடியும்.
லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? 
 
மாநாட்டுப் பாடலை கருணாநிதி எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப் பிழைத்தது.
 
கருணா தமிழைக் காப்பதற்கு என்ன முயற்சியை இதுவரை எடுத்திருக்கிறார்?

தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவது, மற்ற மொழி அறிவியல் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது (இவை இப்போதும் சீனா ஜப்பான் நாடுகளில் மின்னல் வேகத்தில் செய்யப்படுகின்றன) ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் தமிழக அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை.
 
இப்போதும் ஆயிரக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. அதில் மற்ற பாடங்களுக்கு நிரப்பப்படும் அளவுக்கு தமிழாசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்பப்படுவதே இல்லை. தமிழை முதன்மைப்பாடமாக இல்லாமல் ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள். தமிழ்மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை.

இன்று உலகை ஆள்வதாக சொல்லப்படும் ஆங்கிலம் பேசுவது ஒரு காலத்தில் இங்கிலாந்திலேயே கவுரவக்குறைவாக கருதப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய பிரபுக்கள் குடும்பங்களிலும் ஏன் பாராளுமன்றத்திலும்கூட பிரஞ்சு மொழிதான் பயன்படுத்தப்பட்டது (தேவாலயங்களில் லத்தீன்). நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகுதான் ஆங்கிலமே அங்கு தலையெடுத்தது. கோடிக்கணக்கான மக்களுக்கு அன்றாட உணவே நிச்சயமற்றதாகிவிட்ட சூழ்நிலையில் நாம் நம் மொழி குறித்து மட்டும் கவலைப்பட்டால் அது ஒரு சதவிகிதம்கூட பலன்தராது. இனத்தைப் பற்றி கவலைப்படாமல் மொழியை மட்டும் நேசிப்பது அயோக்கியத்தனம். மொழியை கண்டுகொள்ளாமல் இனத்தைப் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது அவ்வாறானதே.
 
 

No comments:

Post a Comment