Thursday, 23 June 2011

பணத்தை தொட்டுக்கூட பார்க்காத மனிதர்

நாள்தோறும், புதுவித ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் நம் நாட்டில், 22 ஆண்டுகளாக பணத்தை தொட்டுக்கூட பார்க்காத மனிதர் ஒருவரும் வாழ்ந்து வருகிறார். ஆம், பணம் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பதால், அதை தொடக்கூட விரும்பவில்லை என்கிறார், இந்த அதிசய மனிதர். மகாராஷ்டிர மாநிலம், பீடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபன்ராவ் மாஷ்கே, 58. விவசாயியான இவர், 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தைத் தொடுவதில்லை என, சத்தியம் செய்து கொண்டார். வெறும் வார்த்தையாக இல்லாமல், அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.

மாஷ்கே கூறியதாவது: கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தகராறு ஒன்றில், என் கிராமத்தினர் சிலர் உயிரிழந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த நான், பணம் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என முடிவு செய்தேன். உயிரோடு இருக்கும் வரையிலும், பணத்தை கையால் கூட இனி தொடுவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டேன். இத்தனை ஆண்டுகளில், என் முடிவை கைவிடும் வகையில், பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சத்தியத்தை தொடர்ந்து காப்பாற்றி வருகிறேன். என் வீட்டைத் தவிர வெளியிடங்களில் உணவு உண்பதோ, தேநீர் குடிப்பதோ இல்லை. என் முடிவால், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. என் சத்தியத்தை தெரிந்து கொண்ட என் முதலாளி, மாத சம்பளத்தை என் குடும்பத்தினர் கையில் அளித்து விடுவார். அதுபோல், வெளியூர் செல்லும் போது, என் மகன் அல்லது நண்பர்களுடன் தான் செல்வேன். பயண வேளையில் ஏற்படும் பணத்தேவையை அவர்கள் பார்த்துக் கொள்வர். இவ்வாறு மாஷ்கே கூறினார். கைக்கு கை மாறும் பணத்தை, கையில் தொடாத இந்த மனிதர், பீடு மாவட்டத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பீடு நடை போட்டு வருவதை, உள்ளூர் மக்கள் வினோதமாக பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment