இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் "சுயாட்சி அந்தஸ்து", "தனி ஈழம்" உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்ட விழ்த்துவிட ஆரம்பித்தது. 2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன.
அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும். இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும், இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன்.
ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு; ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நடத்தப்பட்டன.
இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார்.
இதன் மூலம் உண்ணா விரதம் என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கி விட்டார் முன்னாள் முதலமைச்சர். போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர்.
இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.
இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்.
No comments:
Post a Comment