காந்தியின் பெயரைச் சொல்லி, ஓட்டு வாங்கி ஆட்சி புரிபவர்கள், காந்திய வழிப் போராட்டத்திற்கு பயப்படுவது ஏன்?"கறுப்புப் பணமும், கள்ளப் பணமும் குறைய, 500, 1,000 ரூபாயை ஒழிக்க வேண்டும்' என, பாபா ராம்தேவ் கூறியுள்ளது, சிந்திக்க வேண்டிய ஒன்று தான். நடந்து முடிந்த, தமிழக சட்டசபை தேர்தலில் விளையாடிய பணம் எல்லாம், 500 மற்றும் 1,000 ரூபாய் தான். திருச்சியில் பிடிபட்ட ஐந்து கோடி ரூபாயில், 500, 1,000 ரூபாய்களே இருந்தன. ஏப்ரல் 5ம் தேதி, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்ட வெற்றி, மத்திய அரசிற்கு ஏற்பட்ட பெரிய அடி என்று தான் சொல்ல வேண்டும். லோக்பால் மசோதாவில், பிரதமர் மற்றும் நீதிபதிகளும் வர வேண்டும் என்பதை, இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?
எந்த துறையை எடுத்தாலும், ஊழல் இல்லாத துறையே இல்லை. ஊழலை ஒழித்தால், பாதி கறுப்புப் பணம் ஒழிந்துவிடும். சம்பளத்தை விட, பல மடங்கு லஞ்சம் வாங்கும் அதிகாரியால், தன்னிடம் உள்ள பணத்தை என்ன செய்ய முடியும்? வெளிநாட்டில் தான் பதுக்க முடியும்.இந்திய வளங்களை, வெள்ளையன் வெளிப்படையாகச் சுருட்டினான். இன்று, அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், இந்திய வளங்களை பல வழிகளில் சுருட்டி, வெளிநாடுகளில் முடக்கியுள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளில், வெளிநாடுகள் சென்று வந்த அரசியல்வாதிகள், பண முதலைகள் பட்டியலை புரட்டினாலே, கறுப்புப் பணத்தில் பாதி, "லிஸ்ட்' வந்துவிடும்.
மத்திய அமைச்சர்கள் ஊழல் செய்கின்றனர். பிரதமரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. "கூட்டணி தர்மம்' என்று சொல்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்போர் தாக்கப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். பல தகவல்களை வெளியிட்ட, "விக்கி லீக்ஸ்' இணையதளம் முடக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது, உலக அளவில் ஆளும் வர்க்கம், ஒரே நேர்கோட்டில் தான் செல்கிறது.
No comments:
Post a Comment