2-ஜி அலைக்கற்றைகளைச் சரியான விலைக்கு விற்றிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக் கூடிய வருவாய் 1,76,000 கோடி ரூபாய் என்று அனுமானமாகக் கூறுகிறது, தலைமைக் கணக்காளரின் அறிக்கை. வருவாய் இழப்பு 30,000 கோடி ரூபாய்தான் இருக்கும் என்பது அருண் ஷோரியின் அனுமானம்.
வரி வருவாய் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி, விவசாயிகளுக்கான மானியங்கள் வெட்டப்பட்டு அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதையும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இத்தகைய வரித் தள்ளுபடிகளையும் அம்பலப்படுத்திப் பத்திரிகையாளர் சாய்நாத் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
“வரிகளை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக முதலாளிகள் அனைவரும் வரியைச் செலுத்துவார்கள்; எனவே அரசின் வரி வருவாயைக் கூட்டுவதற்காகத்தான் முதலாளிகளுக்கு வரியைக் குறைக்கிறேன்” என்று தத்துவ விளக்கம் அளித்தார் ப.சிதம்பரம்.
“செல்பேசிகள் 60 கோடியாக அதிகரித்து விட்டன” என்று காட்டுவதற்கு ஒரு கணக்காவது ராசாவிடம் இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகள் மீது விதிக்கப்பட்டு வந்த எல்லா வகையான நேர்முக வரிகளையும் தள்ளுபடி செய்த 1991-2008 காலகட்டத்தில் மட்டுமே 6,37,296 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக “குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி” என்ற அமைப்பு ஆதாரங்களுடன் விளக்குகிறது.
விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனை விதிக்கும் அரசாங்கத்தின் வங்கிகள்தான், இந்தச் சூதாடிகளுக்குக் கடனை வாரி வழங்கியிருக்கின்றன. தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற ஹர்சத் மேத்தா, யூ.டி.ஐ., போலிப்பத்திர ஊழல் என்பன போன்ற எல்லா மோசடி களுக்கும் மூலதனம் தந்து, அவற்றை பிரம்மாண்டமான ஊழல் காவியமாகப் படைக்க உதவியவை அரசு வங்கிகளே. இப்படிப்பட்ட கடன் வழங்கும் கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வங்கிகளுக்கு உத்தரவிடுவது அரசுதான். முதலாளிகளின் வாராக்கடன் தொகையை சுமார் ஒரு இலட்சம் கோடி அளவுக்கு உயர்த்தியதும் இதே தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்தான்.
No comments:
Post a Comment