Thursday, 2 June 2011

கருணாநிதி கவிதை எழுதினார் என்பதற்காக, சமச்சீர் கல்வி

""கருணாநிதி கவிதை எழுதினார் என்பதற்காக, சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
"நான் தொகுத்த பாடலை நீக்கிவிட்டாகிலும் புத்தகத்தை வெளியிடுங்கள்' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொல்கிறபோது, அடடா என்று அவரது பெருந்தன்மையை மெச்ச வேண்டும். கருணாநிதி சிறந்த திரைக்கதை எழுதியவர் என்பதற்கு பராசக்தி ஒரு படமே காலகாலத்துக்கும் சாட்சியாக நிற்கும். அவரது மேடைப்பேச்சுக்கு, அண்ணா மறைவையொட்டி வானொலியில் நிகழ்த்திய கவியஞ்சலி காலகாலத்துக்கும் நிற்கும். தமிழகத்தின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க முற்படும் எவரும் அவரது நெஞ்சுக்கு நீதியைப் புரட்டாமல் இருக்க முடியாது. வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருந்துகொண்டிருந்த போதிலும், இவ்வாறாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுவிட வேண்டும் என்கிற சிறு அரசியல் ஆசை, சிறந்த எழுத்தாளருக்கு இருக்க வேண்டியதில்லை.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதி அல்லது அவரது அமைச்சர்களின் ஆசையில் இடம்பெற்ற பகுதிகளை நீக்கிவிட்டு மீண்டும் புத்தகம் அச்சிடுவதற்காக மக்கள் பணத்தைச் செலவழிப்பதைக் காட்டிலும், அந்தப் பகுதிகளைப் புறக்கணிப்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment