Wednesday, 1 June 2011

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததற்கு ஆதாரமான, ஐந்து நிமிட வீடியோ காட்சிகளை ஐ.நா., வல்லுனர்கள் குழு வெளியிட்டது. இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர், 2009, மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த போர் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து, லண்டனைச் சேர்ந்த, "சேனல்-4' என்ற செய்தி நிறுவனம் வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.இதில் இலங்கை ராணுவம், ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக தமிழ் பெண்களையும், ஆண்களையும் நிர்வாணமாக நிற்க வைத்து கொடூரமாக சுட்டுத்தள்ளிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஐந்து நிமிடம் ஒளிபரப்பாகக் கூடிய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை இலங்கை அரசு மறுத்திருந்தது.
 
ஐந்து நிமிட வீடியோவானது, இலங்கை போர்க்குற்றம் புரிந்தது என்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக, ஐ.நா., மனித உரிமைகள் விசாரணையாளரும், தென்ஆப்ரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "வீடியோ காட்சியில் பதிவானவை அனைத்தும் உண்மை. அந்த வீடியோ, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும்' என்றார்.

வீடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை அரசு மறுத்ததற்கு, உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா., மனித உரிமைகள் குழுவே அதிகாரப்பூர்வமாக வீடியோவை வெளியிட்டுள்ளதால், சர்வதேச நாடுகளில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அநீதி ஈழ தமிழர்களுக்கு மட்டும்மல்ல, எந்த இன மக்களுக்கும் இனி நடக்க கூடாது. இந்த கொடுமையெல்லாம் நடக்குமென்று தெரிந்துதான் புத்தன் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தான் போலும். இலங்கையில் புத்தனை வழிபாடு செய்வதில் அர்த்தமும் இல்லை, புத்தரை வணங்க இலங்கை நாட்டுக்கு அருகதையும் இல்லை.
 

No comments:

Post a Comment