Friday, 19 August 2011

வெள்ளய்காரனிடமிருந்து காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார் ; இன்று கொள்ளைகாரர்களிடமிருந்து

பிரதமரும் இந்த நாட்டின் அரசியல் தலைமையும் உண்மையிலேயே விழித்தெழுந்து ஊழலுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த அரசின் மீது நம்பிக்கை இழந்ததற்கான பிரச்னையின் காரணம் குறித்து வேர் வரை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திர தின உணர்வின் உண்மையான அர்த்தம், பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றியபோது பிரதிபலிக்கவில்லை. அதே நேரத்தில் அன்று மாலை அன்னா ஹசாரே காந்தி சமாதியில் பிரார்த்தனை செய்தபோதும், மறு நாள் அவர் கைது செய்யப்பட்டபோதும் மக்கள் திரண்ட காட்சிதான் அந்த உணர்வை பிரதிபலித்தன. இதுபோன்று முன்பு ஏன் ஏற்படவில்லை? ஊழல்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான கோபம்தான் அதற்கு காரணம். ஸ்பெக்ட்ரம் போன்று அடுத்தடுத்து வரலாறு காணாத ஊழல் புகார்கள் வந்தபோதெல்லாம் இந்த அரசு மறுத்து வந்தது. இறுதியில், எதிர்க்கட்சிகளும், நீதிமன்றங்களும் நெருக்கடி கொடுத்தபின்புதான் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பிலேயே ஊழல் நடந்துள்ள நிலையில், தெருவில் இறங்கி போராடும் இளைஞர்களை ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்?

இந்த அரசுக்கு உள்ள பிரச்னை என்னவென்றால், பிரதமருக்கு ஆலோசனை கூறுவதற்கு பல வக்கீல்கள் இருந்தபோதிலும், அரசியல் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டுமே தவிர போலீஸ் மூலம் அல்ல என்பதை யாரும் புரிந்து கொள்ளாததுதான். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் சுதந்திர போராட்ட தியாகிகள் மீதும், மகாத்மா காந்தி மீதும் இதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் நீங்களும் அதுபோன்ற தேவையற்ற நிபந்தனைகளை விதிக்க தேவை இல்லை. அன்னாவின் போராட்டத்துக்காக விதிக்கப்பட்ட 22 நிபந்தனைகள் வெளிப்படையான கண்டனத்துக்கு உரியவை. இத்தனை பேர்தான் கூட வேண்டும், இத்தனை வாகனங்கள்தான் வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாமா? காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் 5 ஆயிரம் பேருக்கு அதிகமாக கூட மாட்டோம் என்று உறுதி மொழி அளிக்க தயாரா? பிரதமரின் ஆலோசகர்கள் ஹசாரேவின் போராட்டத்தின் தன்மை, அவருக்கு மக்களிடம் உள்ள அமோக ஆதரவை புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். இதனால்தான் ஹசாரே கைது விவகாரத்தில் டெல்லி போலீஸ் கமிசனரின் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடுகிறவர்களுக்கு எதிராக அரசு புதிய மரபு சொற்றொடரை பயன்படுத்த தொடங்கி உள்ளன. கூலிப்படை கொலையாளிகளைப் போல், கடுமையான வார்த்தைகளால் தாக்குதல் தொடுப்பதற்கு அரசியல் கட்சி செய்தி தொடர்பாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு அரசியல் ரீதியான வாக்குவாதங்களை கொண்டு வந்துவிட்டீர்கள். இந்த அகந்தை மற்றும் தற்பெருமை இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது.

No comments:

Post a Comment