எதிர்பார்த்தபடியே அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் ஏழு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.திகார் சிறையை இப்போது சமரசம் உலாவும் இடமாகக் கருதலாம். லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்தவர்களும் திகார் சிறையில்; ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று சொல்பவர்களும் அதே திகார் சிறையில். நன்றாகவே இருக்கிறது.
று சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர், உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார். இன்று இந்தக் கைதுக்குத் தொடர்விளக்கம் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்குக்கு, ""சட்டங்கள் மைதானத்தில் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்படுவதில்லை'' என்கிறார். இரண்டுபேர் சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகூட யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உண்மையாகிறது.
வலுவான சட்டம் கொண்டுவர மசோதா தயார் என்கிறார். ஆனால், அந்த மசோதாவில் குறையிருக்கிறது, அதை நீக்கி வலுப்படுத்துங்கள் என்று சொன்னால், செவிமடுக்க அவரது அரசு மறுக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதம் என்கிற அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினால், ""தில்லி போலீஸ் தன் கடமையைச் செய்யும்'' என்கிறார் பிரதமர்.
அண்ணா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகளை ஆதரிக்க முடிகிறது. அரசுத்தரப்பு கூறும் வாதங்களில் சில நியாயங்கள் இருந்தாலும், அரசுத் தரப்பை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. காரணம், அண்ணா ஹசாரேயிடம் உண்மையும், தேசப்பற்றும், நேர்மையும் இருக்கிறது. அரசுத் தரப்பின் வாதங்களில் அதிகார மமதையும், சுயநலமும், அதர்மத்தின் வெளிப்பாடுதான் வெளிப்படுகிறது. ஊழல் ஒழிப்பைப் பற்றி மன்மோகன் சிங் அரசு பேசினால், சாத்தான் வேதம் ஓதுவதுபோல இருக்கிறதே தவிர, இதய சுத்தியுடன் ஊழலுக்குக் கடிவாளம் போடும் எண்ணம் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.
No comments:
Post a Comment