யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். இப்படி ஒரு பிரதமர் கிடைத்ததுக்கு, நாம் எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டுமென்று. பதிலே கிடைக்கவில்லை. அவ்வளவு தவம் செய்துவிட்டேன் போல. "அதெல்லாம் எனக்குத் தெரியாது; அதைப் பற்றி என்னிடம் கேட்கவே இல்லை; என் அமைச்சரவை சகா யார் என்பதை நான் தீர்மானித்துவிட முடியாது; சில விஷயங்களில் சமரசம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது' என, அசராமல் பதில்களை அடுக்கிக்கொண்டே சென்றார்,
மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள். அவர் சந்தித்தது, செய்திச் சேனல்களின் ஆசிரியர்களை. அவர்கள் அதிகம், "பீல்டு'க்கு போகாதவர்கள்; நாகரீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். "நாளை சில வேலை ஆக வேண்டியிருக்கும்' என நினைப்பவர்கள். அதனால், மிகவும் நிதானமான, மென்மையான கேள்விகளையே முன்வைத்தனர். அதைக் கூட சமாளிக்க முடியாமல், உளறிக் கொட்டியிருக்கிறார் சிங். இளமையும், வேகமுமிக்க இளைய தலைமுறை பத்திரிகையாளர்களிடம் சிக்கியிருந்தால் அவர் என்ன ஆகியிருப்பார் என்பதைச் சிந்திக்கவே முடியவில்லை. "எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது. நான் பார்த்துக்கிறேன்' என்று ராஜா சொன்னாராம். இவரும் தலையை ஆட்டினாராம். "முதலில் வருபவருக்கே முன்னுரிமை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என சத்தியம் செய்கிறார். தனக்கு கீழ் பணிபுரியும் அமைச்சர்கள் என்ன செய்கின்றனர் என்பதைக் கூட கண்காணிக்காவிட்டால், இந்தப் பிரதமருக்கு வேறு என்ன தான் வேலை? வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போது கைகுலுக்குவதா? "கூட்டணி அரசில் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது; சில நிர்பந்தங்கள் தவிர்க்க முடியாதவை' என்கிறார். அப்புறம் எதை வைத்து, "ஊழல்வாதிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள்' என்று சொன்னார்? கூட்டணி நிர்பந்தத்துக்காக ஊழலை அனுமதிப்பவர்கள், நாளை அமெரிக்கா அல்லது சீனாவின் நிர்பந்தத்துக்காக நாட்டையே விற்றுவிட மாட்டார்களா? நிர்பந்தங்களுக்கு அடிபணிவதற்காகவா, அவரை பிரதமர் பதவியில் உட்கார வைத்திருக்கிறது? சரி; கூட்டணி தர்மத்தால் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்றால், ஐ.பி.எல்., 20-20, காமன்வெல்த், ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சி காரணம்? சம்பந்தப்பட்டவர்களைப் பதவி விலகச் சொன்னால் போதுமா? அவர்கள் கொள்ளையடித்த பணத்தை யார் மீட்பது? "யாராக இருந்தாலும் சரி... தவறு செய்பவர்கள், குற்றவாளிகள், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதில் எனது அரசு ரொம்ப சீரியசாக இருக்கிறது' என சிரிக்காமல் சொல்லியிருக்கிறார். அப்படி தண்டிக்க முனைந்தால் தான் அவரது அரசின் நிலைமை சீரியசாகிவிடும். அப்படி சீரியசாக இருக்கும் அரசு தான், "குவாட்ரோச்சி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை; எஸ்-பாண்ட் ஒப்பந்தம் பற்றி பிரதமருக்குச் சொல்லப்படவே இல்லை' என்றெல்லாம் சொல்கிறது போலும்! "ஊழல் ஊழல் என பிரசாரம் செய்வதால், மக்களின் மன உறுதி குலைந்துவிடும்' என கவலை வேறு தெரிவிக்கிறார். இவர்களின் ஊழல் வேகத்தைப் பார்த்து, மக்கள் இன்னும் கொத்து கொத்தாக தற்கொலை செய்யாமல் இருக்கிறார்களே; அதுவே அவர்களின் மன உறுதிக்கான சான்று தான். இல்லையென்றால், எகிப்து மாதிரி எப்போதோ எரிமலையாக வெடித்திருக்க மாட்டார்களா? இவர்களின் ஊழல் கணக்கில், ஒன்றுக்குப் பின்னால் எத்தனை பூஜ்யம் வருகிறது என எண்ணி அதிசயிக்கப் பழகிவிட்டார்களே தவிர, "என்ன அராஜகம் இது' என கொதித்தெழத் தயாராகவில்லை. "பணவீக்கம் சரிசெய்யப்படும்; விலைவாசி கட்டுப்படுத்தப்படும்' எனவும் உத்தரவாதம் அளித்திருக்கிறார். இந்த ரெண்டு விஷயத்துக்காகவும் இவரது அரசு, ஒரு சின்ன செங்கல்லையாவது எடுத்து வைத்ததா எனச் சொல்லட்டும். உலகமே பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தபோது, "கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்; உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என பம்மாத்து விட்டுக்கொண்டிருந்தார் இவரது நிதியமைச்சர் பிரணாப். இந்தியா அதில் பாதிக்கப்படாமல் மீண்டெழுந்ததும், "ஆகா! பார்த்தீர்களா எங்கள் நடவடிக்கைகளை' என காலரைத் தூக்கி விட்டுக்கொண்டனர். ஆனால், அப்படி என்ன நடவடிக்கை எடுத்தனர் என எவராலும் சொல்ல முடியவில்லை. காரணம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "நான் இதுவரை தப்பே செய்யவில்லை எனச் சொல்லவில்லை. ஆனால், நீங்கள் நினைக்கும் அளவுக்கு செய்துவிடவில்லை' என விளக்கம் சொல்லியிருக்கிறார். இவர்களது சாதாரண தப்பே இந்த அளவு இருக்கும்போது, பெரிய தப்புகள் எந்த அளவு இருக்கும் என நினைத்தாலே தலை சுற்றுகிறது. எல்லாவற்றையும் விட, அரிசிக்கு கொடுக்கப்படும் மானியத்தையும், அம்பானிக்கு கொடுக்கப்படும் ஆடித்தள்ளுபடியையும் ஒப்பிட்டார் பாருங்கள்: அப்போது தான் தெரிந்தது, ஏழைகளின் மீது திருவாளர் பரிசுத்தத்துக்கு எத்தனை காதல் என்று!
No comments:
Post a Comment