Friday, 12 August 2011

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அ.தி.மு.க., அரசு

அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக, அரசியல் பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அ.தி.மு.க., அரசு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம், தி.மு.க., புகார் அளித்துள்ளது.

தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பர். தி.மு.க.,வினருக்கு இப்போது தான் வந்திருக்கிறது. இவர்கள் ஆட்சியில் இருந்தபோது, எத்தனை பேரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருந்திருப்பர்? அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களுக்கும் இந்த சட்டப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமை போன்றவை உண்டு அல்லவா? அதை அவர்களுக்கு வழங்கினரா?

தற்போதைய அரசு, தி.மு.க.,வினர் மீது, போடும் வழக்குகள் அனைத்தும், பொய்யானது என்று கூறும் முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும், அதை, தம் கட்சியினரை துணிச்சலுடன் எதிர்கொண்டு, தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்க செய்யலாம்.அரசின் அராஜகம், அடக்குமுறை, பொய் வழக்குகள் என்று ஏன் போராட்டம் செய்யவேண்டும். இதை பார்க்கும்போது, அச்சப்படுவது போலத் தெரிகிறது.ஜெயலலிதா தன் கட்சி, மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.,வினரால் மோசடி செய்து, அபகரிக்கப்பட்ட நிலங்களையும், சொத்துக்களையும் மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க, தன் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அறிவித்தார். அவ்விதமே முதல்வரானதும், தான் சொன்னபடி, நில அபகரிப்பு சம்பந்தமான புகார்களை விசாரித்து, நடவடிக்கை மேற்கொள்ள ஆணை பிறப்பித்துள்ளார்.மடியில் கனம் இல்லை என்றால் ஏன் பயம்.

No comments:

Post a Comment