Tuesday, 3 May 2011

பின்லாடனின் படம் மிக கோரமாக இருந்ததன் காரணத்தினாலேயே அது வெளியிடப்படவில்லை

ஒசாமா பின்லாடனின் படம் மிக கோரமாக இருந்ததன் காரணத்தினாலேயே அது வெளியிடப்படவில்லை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறியதாவது, ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட நிலையில், அவனது உடல் மிகவும் கோரமாக இருந்தது. இதனால்தான், அவனது போட்டோ வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு துணைபோயுள்ளது உறுதியாகி உள்ளதாக விக்கிலீக்ஸ் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. "அபோதாபாத்தில் பின்லாடன் தங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது' என, பாகிஸ்தான்
மறுத்தாலும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் மீது, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒசாமா பின்லாடன் கடந்த மே 2ம் தேதி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அரு‌கில் அபோதாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்தபோது, அமெரிக்காவின் அதிரடி ஆபரேஷனில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே இந்த அதிரடி ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது அமெரிக்கா. இந்நிலையில் பின்லாடன் தங்கியிருந்த வீடு, பாகிஸ்தானின் ராணுவ பயிற்சி மையத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இவ்வளவு காலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமல் பின்லாடன் எப்படி தங்கியிருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் நா‌ட்டை சந்தேகிக்கிறது.

கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அப்போதைய அதிபர் முஷாரப் ஒசாமா பாகிஸ்தானில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறினார். இதனையடுத்து அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கைன் மற்றும் அதிபர் முஷாரப் இடையேயான அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் பின்லாடன் மற்றும் அய்மான் அல் ஜவாரி ஆகியோர் பாஜ்பூர் மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு அதிபர் சொன்ன ஒரு வாரத்திற்குள், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பின்லாடன் மற்றும் அவரது கூட்டாளிகள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்று அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

அதேபோல் அதிபர் சர்தாரி அதிபராக பொறுப்பேற்ற பின்னர், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் சர்தாரியை சந்தித்து பேசியுள்ளனர்.அப்போது அமெரிக்க அதிகாரிகள் ஒசாமா குறித்து இன்னும் ஒருதகவலும் தெரியவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளனர். அதற்கு சர்தாரி ஒசாமாவிற்கு எதிரான தேடுதல் வேட்டை ஒருபோதும் தோல்வி அடையாது. நிச்சயம் நாங்கள் கண்டுபிடிப்போம். பாகிஸ்தான் அரசு ஒசாமாவிற்கோ அல்லது பயங்ரவாதத்திற்கோ எப்போதும் துணை போகாது என்று பேசியிருக்கிறார்.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் தான், கடந்த சில மாதங்களாக, ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்தார்.கடந்த 1ம் தேதி அதிகாலையில், பின்லாடன் பதுங்கியிருந்த இடத்தில், அமெரிக்க கமாண்டோ படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இச்சண்டையில், பின்லாடனும், அவருடன் இருந்தவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே, இந்த தாக்குதலை அமெரிக்கப் படையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அதிபர் ஒபாமா, இதை, "நீதி நிலைநாட்டப்பட்டது' என்றார்.

ஒசாமா பதுங்கியிருந்த அபோதாபாத் இல்லத்தில் இருந்து அமெரிக்க படைகள் முக்கிய ஆவணங்கள், சி.டி.,க்கள், பென் டிரைவ் ஆகியனவற்றை பறிமுதல் செய்துள்ளன. அவற்றில் பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும். அதன் அடிப்படையில் அல்குவைதா நெட்வொர்க்கை மேலும் நெருங்க முடியும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்த தாலிபன். லஷ்கர் இயக்கங்கள் குறித்தும் தகவல்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment