ஓரு சேஷனைத்தான் பார்த்தோம்; இன்றைக்கு, திரும்பிய பக்கமெல்லாம் சேஷன்கள் தான். அதிலும், தனி மனுஷியாக, ஐந்தே கால் கோடி ரூபாயை நள்ளிரவில் பிடித்த சங்கீதா, அகில இந்திய அளவில், ஒரே நாளில் பிரபலமாகி விட்டார். அவரோ, "நான் என் கடமையைத் தானே செய்தேன்' என்கிறார் அடக்கமாக!
மிகவும் கடமை உணர்ச்சியுடன், அதிகாரிகள் நடத்தும் இந்த தேர்தலை, நாம் மதிப்பதும், நன்றி செலுத்துவதும் எப்படி என்றால், தவறாமல் ஓட்டு போடுவதன் மூலம் தான். காரணம், அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியல்வாதிகளோ, "ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்; காரணம், அது உங்கள் பணம்' என்று, தங்களைப் போலவே லஞ்சம் வாங்கச் சொல்கின்றனர். அவர்களின் பேச்சைக் கேட்டு, அந்த அசிங்கம் பிடித்த பணத்தை தொடாமல், சிங்கம் போல கம்பீரமாக போய், உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். உங்கள் சொந்த வாகனங்களிலேயே போய், ஓட்டு போட்டு விட்டு வாருங்கள். சொந்தமாக சைக்கிள் கூட இல்லையா... பராவாயில்லை நடந்து போய் ஓட்டு போட்டு விட்டு வாருங்கள்; உங்கள் மனசு உங்களை பாராட்டும். ஓட்டுச்சாவடிக்கு போய்விட்டு, வரிசை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்பட்டு திரும்பாமல், கொஞ்சம் பொறுமையாக இருந்து, உங்கள் மதிப்புமிக்க ஓட்டுகளை பதிவு செய்யுங்கள். ஓட்டுப்பதிவு அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை என்பது ஓட்டுப் போடுவதற்காக. ஆகவே, அன்று, சீரியல்களில் மூழ்கி விடாமல், மறக்காமல் ஓட்டு போட்டு விடுங்கள். ஐந்து மணி வரை நேரம் இருக்கிறதே என்று அசட்டையாக இருக்காமல், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஓட்டுச்சாவடிக்கு போய், உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். மதிய உணவு முடித்து, நீங்கள் ஒரு முடிவெடுத்து ஓட்டுச்சாவடிக்கு செல்வீர்கள் என்றால், ஏற்கனவே உங்கள் பெயரில் ஒருவர் முடிவு எடுத்திருப்பார்.
தமிழக முதல்வர் கருணாநிதி : "வரும் காலத்திலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் அதிகாரங்கள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து செயல்பட வேண்டும்' . தேர்தல் கமிஷன் எங்களை கண்காணித்து வருகிறது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கக் கூடாது என்றோ, தேவையற்றது என்றோ, அதை எதிர்த்தோ எதுவும் கூற விரும்பவில்லை.
"தி.மு.க., தான் தமிழகத்தை இன்னும் ஆள்கிறதா? நான் தான் தமிழக முதல்வராகயிருக்கிறேனா?' என்ற சந்தேகம் கருணாநிதிக்கு வந்ததற்குக் காரணமே, தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரின் நடுநிலையான நடவடிக்கை தான்! "எங்களுக்கு எதிரி அ.தி.மு.க., தலைவி அல்ல; தேர்தல் கமிஷன் தான்' என்று கருணாநிதியே மனம் நொந்து போகும் அளவுக்கு, தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள் அமைந்துவிட்டன.
தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தால், இவருக்கு ஏன் கோபம் வருகிறது? அமைதியான தேர்தல் நடத்த, சில விதிமுறைகளை வரையறுத்துச் சொல்கிறது தேர்தல் கமிஷன். அதன்படி நடப்பதில், இவர்களுக்கு என்ன கஷ்டம்? ஏராளமான கார்களுடன், புழுதி எழுப்பி, சத்தம் போட்டபடிச் சென்றால் தான் தேர்தலா? இவர்கள் செய்ய வேண்டிய பட்டுவாடாக்களை, முன்னரே துவங்கி, அனேகமாக முடித்துவிட்டனர் என்பது தான் நாடறிந்த சங்கதியாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் செலவழிக்க, கட்டுப்பாடு வருகிறதா? அதற்கும் தான் ஆயிரம் வழிகள் கண்டுபிடித்து செயல்படுகின்றனரே! அப்படியிருந்தும் ஏன் கோபம் வர வேண்டும்? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், "சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம்' என, ராஜாவும், கனிமொழியும் கூறினரே, அதுபோல, "தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம்' எனக் கூறிவிட்டுப் போக வேண்டியது தானே? வீணாக தேர்தல் கமிஷனை குறைபட்டுக் கொள்வானேன்? சட்டத்துக்குப் புறம்பாக பணம் எடுத்துச் செல்வது கண்காணிக்கப்படும் போது, பொதுமக்களில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டால், அதற்குக் காரணம் இவர்கள் தானே?
No comments:
Post a Comment