Friday, 29 April 2011

ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்

"செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே இறைவனுக்குச் செய்யும் வழிபாடு' என்று வாழ்ந்து பழகியவன் தமிழன். தன் கையே தனக்கு உதவி, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற சுயமரியாதை உணர்வு இயல்பாகவே தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. இறைவா என்னை யாரிடமும் கையேந்த வைத்துவிடாதே, பிச்சையெடுத்துத் தின்னும் கேவல நிலை மட்டும் எனக்கு வந்துவிடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்ளும் தமிழர்களே இன்னும் பெரும்பான்மையாக உள்ளனர்.

உலகனைத்தும் உள்ள உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமசிவன்கூட பிட்டுக்கு மண் சுமந்தான், பிரம்படி பட்டான். அதாவது உழைக்காமல் உண்பதைத் தவறு என சிவபெருமானே தனது திருவிளையாடல் மூலம் உணர்த்தியுள்ளார்.

தமிழகத்தின் அடிப்படைத் தேவைகளான நதிநீர் இணைப்புத் திட்டங்கள், மின்உற்பத்தித் திட்டங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரம் வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு, மழைநீர் சேகரிப்பு, விவசாய வளர்ச்சி, நெசவுத் தொழில் பாதுகாப்பு, உணவு உற்பத்தி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், முழுமையான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, தேர்ந்த நிர்வாகம் ஆகியவை குறித்து இரு அரசியல் கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது வருந்தத்தக்கது.

கருணாநிதி அறிவித்த இலவசத் திட்டங்கள் அனைத்துமே அவரது குடும்பத் தொழில்களுக்கு மூலதனமாக அமைந்து அவரது குடும்ப வருவாயைப் பெருக்கியது என்பதுதான் கண்கூடாக நாம் கண்ட உண்மை.

உதாரணமாக, இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியதன் மூலம் கருணாநிதியின் பேரன்களாகிய மாறன் குடும்பத்தினரின் சுமங்கலி கேபிள் நிறுவனமும், கருணாநிதியின் மகன் அழகிரி குடும்பத்தின் கேபிள் நிறுவனமும் பயனடைந்தன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திய தனியார் நிறுவனமாகிய ஸ்டார் குழுமம் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான நிறுவனம்.

ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் என கருணாநிதி அறிவித்துள்ளதன் உள்நோக்கம் ஏழ்மை அகற்றப்பட வேண்டும் என்பதல்ல, ஏழைகள் என்றும் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும், அவர்களின் வாக்குகளை இத்தகைய இலவசத் திட்டங்களின் மூலம் பெற்று தானும் தன் குடும்பத்தாரும் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதுதான் இந்த அறிவிப்புகளின் உண்மையான நோக்கமாகும்.

மீபத்தில் நடைபெற்ற குஜராத், பிகார் சட்டமன்றத் தேர்தல்களில் கருணாநிதியின் தேர்தல் அறிக்கை பாணியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இலவசத் திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளைக் கொடுத்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தோற்கடிக்கவும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை முறியடிக்கவும், காங்கிரஸ் கட்சி இத்தகைய தந்திரமான முயற்சிகளைச் செய்தது.

இலவச மின்சாரம், வண்ணத் தொலைக்காட்சி என குஜராத்தில் காங்கிரஸ் கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் நரேந்திர மோடியை வீழ்த்த முடியவில்லை. மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இலவசத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். குஜராத்தியர்கள் தன்மானம் உள்ளவர்கள், குஜராத்தியர்களைப் பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கும் காங்கிரஸýக்குத் தக்க பதிலடி கொடுங்கள் என்று குஜராத் மாநில மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

இதேபோல நிதீஷ்குமாரின் திறமையான நிர்வாகத்தால் பிகார் வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதைக் கண்டு பொறுக்காமல் இத்தகைய கருணாநிதி பாணி இலவசத் திட்டங்களை லல்லுவும், காங்கிரஸ் கட்சியும் பிகார் மாநிலத்தில் தேர்தல் அறிக்கைகளாகக் கொடுத்தனர். சுயமரியாதை உணர்வுள்ள பிகார் மக்கள் இலவச கவர்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து நிதீஷ்குமாரின் நிர்வாகத் திறமைக்கே வாக்களித்தனர். மிகப் பின்தங்கிய மாநிலமான பிகார் இப்போது தொழில் விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.

No comments:

Post a Comment